மத்திய குழுவினரின் பாராட்டு அவதூறு பேசுபவர்கள் கன்னத்தில் விழுந்த பளார் அறை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களை பற்றி கவலைப்படாமல் மக்கள் நலன் காக்கும் அரசு திமுக. பேரிடரிலிருந்து மீண்ட மக்களின் மகிழ்ச்சியான மனநிலை தொடர்ந்திட வேண்டும். எத்தகைய இடர் வந்தாலும், அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறையும், பொறுப்பும் கொண்டது திமுக. இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும்.
திராவிட மாடல் அரசின் பணிகளை பிற மாநிலங்கள் கவனிக்கின்றன. பங்களா வாசலில் உள்ள பெரிய கதவு திறக்கும்வரை காத்திருக்கும் முந்தைய ஆட்சியின் நிலைமை இன்றில்லை. டிவியில் பார்த்துதான் விவரம் தெரிந்துகொண்டேன் என்று கூறும் முந்தைய அரசு நிலை இன்றில்லை. மக்கள் பிரதிநிதிகளை அணுக முடியும், கேள்வி கேட்க முடியும் என்ற ஜனநாயகப்பூர்வமான அரசு செயல்பட்டு வருகிறது.
புயல் பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்பிட அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டன. நிவாரணப் பணிகளும், மீட்பு நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. விமர்சனம் செய்வதற்கும், வீண்பழி சுமத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டினாலும், மக்களின் துயர் துடைக்க முன்வரவில்லை. மிக்ஜம் புயல் பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழுவினர் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை பாராட்டியது, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.