காவிரி நீர் பங்கீட்டில் 2 நாளில் மத்திய மந்திரி நடவடிக்கைஅமைச்சர் துரைமுருகன் பேட்டி
காவிரி நீர் பங்கீட்டில் 2 நாளில் மத்திய மந்திரி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார்.
மீனம்பாக்கம்,
காவிரி நீர் பங்கீட்டில் இன்னும் 2 நாளில் மத்திய மந்திரி நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லியில் மத்திய ஜல் சக்தி துறை மந்திரியை சந்தித்து காவிரியில் நீர் திறந்து விடக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார். பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
காவிரியில் இருந்து மாதந்தோறும் இவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஜூன் மாதம் சுமார் 26 டி.எம்.சி. வரை தண்ணீர் தர வேண்டும். ஆனால் 3 டி.எம்.சி. தான் தண்ணீர் தந்து உள்ளனர். இதனால் டெல்டா பகுதிக்கு இன்னும் 20 தினங்களுக்குதான் தண்ணீர் வழங்க முடியும்.
மழை பெய்தால் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் பயிர்கள் காயும் நிலைமை உள்ளது. இதை முன்கூட்டியே உணர்ந்துதான் கடந்த 5-ந் தேதியே டெல்லி சென்று மத்திய நீர் வளத்துறை மந்திரியை பார்த்து உடனடியாக தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினேன்.
காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றாலும், நீர் பற்றாக்குறை இருந்தாலும் இரு மாநிலங்களுக்கும் பங்கீட்டு தரவேண்டிய பொறுப்பு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உள்ளது. ஆனால் மேலாண்மை ஆணையம் மெத்தனமாக இருக்கிறது. ஆணையம் விரைவாக செயல்பட உத்தரவிடும் அதிகாரம் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு தான் உண்டு.
கடந்த 5-ந் தேதி நடந்த சந்திப்பால் எந்த பயனும் இல்லாததால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைமையை விவரமாக நீர் வளத்துறைக்கு கடிதம் எழுதி என்னிடம் தந்தார். அந்த கடிதத்தை மத்திய மந்திரியிடம் கொடுத்து நிலைமைகளை விளக்கினேன்.
இன்னும் இரண்டொரு நாளில் ஆணையத்தை அழைத்து இருக்கின்ற நீரை எப்படி பங்கீட்டு வழங்க முடியுமோ அதை வழங்க உத்தரவிடுகிறேன் என மத்திய மந்திரி கூறினார். நம்பிக்கையுடன் வந்து உள்ளேன். இந்த நம்பிக்கை பலன் தருமானால் தஞ்சை தரணியில் பயிர்கள் காப்பாற்றப்படும்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் வாய் திறந்தது மட்டுமில்லாமல் விரைவாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும். கலவரம் நடந்த போதே தடுத்திருந்தால் இந்த கேவலம் ஏற்பட்டு இருக்காது.
கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. அதனால் பயனில்லை. மேலாண்மை ஆணையம் மூலமாகத்தான் சாதிக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தினால் நாளை எந்த கோர்ட்டுக்கும் போக முடியாது.
சில புத்திசாலிகள் நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் ஆணையத்துக்கே எழுதி இருக்காலாமே என்று கூறுகின்றனர். முதல்-அமைச்சர் பிரதமருக்குத்தான் கடிதம் எழுதுவார். நிலைமையை கருதி மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.