நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் - விஜயகாந்த்
நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.;
சென்னை,
நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாய மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடவும் தேமுதிக தயங்காது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தமிழக விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல உள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே வறட்சி, மழை நீரில் மூழ்கி விளைநிலங்கள் சேதம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுபோன்ற சூழலில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதால் ஒட்டு மொத்த டெல்டா பகுதிகளும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. மேலும் நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும். மேலும் விவசாயமும் கேள்விக்குறியாகிவிடும்.
விவசாயிகள் மீது உண்மையில் பற்று இருப்பதாக சொல்லி கொள்ளும் மத்திய அரசு, தற்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவித்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாய மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடவும் தேமுதிக தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.