மாநிலங்களுக்கு வழங்கும் அரிசியை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
மத்தியத் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு வழங்கும் அரிசியை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியத் தொகுப்பிலிருந்து வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு அரிசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. தனியாருக்கு அரிசியை விற்பனை செய்யும் நோக்குடன் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால், தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்குவது பாதிக்கப்படும். மத்திய அரசின் இந்த முடிவு மக்கள்நலனுக்கு எதிரானதாகும்.
இதனால் மாநில அரசுகளின் பொது வினியோகத் திட்டம் கடுமையாக பாதிக்கப்படும். மாநில அரசுகளுக்கு அரிசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி விட்டதால், தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 24 கோடி கிலோ அரிசி பற்றாக்குறை ஏற்படும். அதனால், சராசரியாக 10 லட்சம் முதல் 12 லட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே, மத்தியத் தொகுப்பிலிருந்து வெளிச்சந்தை விற்பனை முறையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்திய உணவுக்கழகத்திடம் உள்ள அரிசி மற்றும் கோதுமையை மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தாராளமாக வழங்கி, வெளிச்சந்தையில் அதன் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.