9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.2 ½ லட்சம் கோடி வழங்கியது மத்திய அரசு -அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.2½ லட்சம் கோடி நிதி வழங்கி உள்ளதாக வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2023-06-12 00:26 GMT

வேலூர்,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார்.

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு துறைகளின் பிரபலங்களை சந்தித்து அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து தென்சென்னை தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித்ஷா, வேலூர் புறப்பட்டு சென்றார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரியில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் மத்திய மந்திரி வி.கே.சிங், புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பா.ஜ.க. இணை பொறுப்பாளர் சுதாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் கார்த்தியாயினி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

சிறப்பாக ஆட்சி

வேலூரில் கடுமையான வெயிலில் கூட நீங்கள் கூட்டத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதத்தின் தொன்மையான மொழியான தமிழ்மொழியில் பேச முடியவில்லையே என்பதை மிகவும் வருத்தத்துடன் கூறி மன்னிப்பு கேட்கிறேன்.

பாரத பிரதமர் நரேந்திரமோடி 9 ஆண்டு காலம் மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்துவதற்கு தமிழக மக்கள் தந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளேன்.

ஊழல் இல்லாத ஆட்சி

இந்த ஆட்சிக்கு முன்பு10 ஆண்டுகள் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அப்போது அவர்கள் ரூ.12 ஆயிரம் கோடி ஊழல் செய்தார்கள். ஆனால் பா.ஜ.க. 9 ஆண்டுகால ஆட்சியில் சுட்டிக்காட்டும் அளவிற்கு ஒரு ஊழல் கூட இல்லாமல் சிறப்பான ஆட்சி நடக்கிறது. 2024-ம் ஆண்டு 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவார். தமிழக மக்களின் ஆசீர்வாதத்தோடு 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்று கொடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று தமிழக எம்.பி.க்கள் மத்திய மந்திரி சபையில் இடம் பிடிக்க போகிறார்கள். பிரதமர் மோடி தமிழ்மொழியையும், அதன் தொன்மை, சிறப்பையும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்புகள் சேர்த்துள்ளார்.

உலகின் எந்த நாட்டிற்கு பிரதமர் சென்றாலும் தமிழின் பெருமை, இலக்கியம், கவிதைகளை கூறி தமிழை பெருமைப்படுத்தி வருகிறார். காசி தமிழ் சங்கமத்தில் தொன்மையான திருக்குறளை 23-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து அனைத்து மாநில மக்களும் படிக்கும் வகையில் வெளியிட்டார். உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையை பிரதமர் மோடி பேசி வருகிறார்.

மு.க.ஸ்டாலினுக்கு பதில்

ஆனால் தமிழ்... தமிழ்... எனவும் தமிழுக்காக வாழ்கிறோம் என்றும் சொல்லும் தி.மு.க., 18 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது நீட் தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு, சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழக மக்கள் தமிழ் மொழியில் எழுத முடியாத நிலை இருந்தது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த தேர்வுகளை தமிழிலேயே எழுத நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள். அதனை பட்டியலிட முடியுமா என்று கேட்கிறார். காதுகளை நன்றாக திறந்து வைத்து நான் சொல்ல போகும் பட்டியலை கேளுங்கள். தைரியம் இருந்தால் நாளை எனக்கு இதற்கு பதில் கூறுங்கள்.

இதற்கு முன்பு காங்கிரஸ் - தி.மு.க. 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு கொடுத்த பங்களிப்பு தொகை ரூ.95 ஆயிரம் கோடி. ஆனால் 9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு கொடுத்துள்ளார். காங்கிரஸ் - தி.மு.க. ஆட்சியில் ரூ.58 ஆயிரம் கோடி மானியம் கொடுத்தீர்கள். ஆனால் 9 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் கோடி மானியமாக பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கட்டமைப்பு பணி வேகம் எடுத்துள்ளது. 2,352 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 3,719 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான தொகை ரூ.58 ஆயிரம் கோடியாகும்.

ரூ.3 ஆயிரம் கோடி செலவில் 105 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட உள்ளது. ரூ.50 ஆயிரம் கோடி செலவில் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு விரைவு பாதை அமைப்பதற்காக தற்போது திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மெட்ரோ ரெயில் பேஸ்-1,2 என்று 2 பாதை அமைப்பதற்கு ரூ.72 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி ரெயில் நிலையங்களை ரூ.3,500 கோடி செலவில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை-பெங்களூரு, சென்னை-கோவை இடையே இயக்கப்பட்டு வருகிறது. 56 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

84 லட்சம் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. 2.5 கோடி மக்களுக்கு ஆயுஷ்மான் திட்டத்தில் மருத்துவ உதவி செய்யப்பட்டு உள்ளது. 62 லட்சம் கழிப்பறைகள் ஏழை, எளிய மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை தரமணியில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கு புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் ஏன் திறக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர். நான் இந்த கேள்வியை அ.தி.மு.க.வினருக்கு கேட்க விரும்புகிறேன். ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையை ஏன் திறக்கவில்லை என்று அ.தி.மு.க.வினர்தான் பதில் அளிக்க வேண்டும். மத்தியில் 18 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சியில் இருந்த தி.மு.க. தமிழகத்துக்கு ஏன் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வரவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பகுதி-1,2 பணிகள் தொடங்கி விட்டது. கோவையில் ரூ.1,500 கோடி செலவில் இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது.

ஊழலற்ற ஆட்சி

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்கி, மாணவர்கள் படிக்க தொடங்கி விட்டனர்.

காங்கிரஸ் - தி.மு.க. கட்சிகள் ஊழல் செய்யும் கட்சிகள். அந்த கட்சிகள் 2,3,4 தலைமுறையாக ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஊழல் செய்பவர்களை தூக்கி எறிந்து விட்டு ஊழலற்ற தமிழனின் ஆட்சி அமைக்கும் நேரம் வந்துவிட்டது. ஒற்றை கையெழுத்து போட்டு இந்தியாவுடன் முழுமையான காஷ்மீரை இணைத்தவர் பிரதமர் மோடி. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது.

அப்போது தமிழகத்தில் இருந்து 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செங்கோலின் கீழ் அமர்ந்து பணியாற்ற அனுப்ப வேண்டும். மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம்.

இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா பேசினார்.

செங்கோல் நினைவுப்பரிசு

முன்னதாக அமித்ஷாவிற்கு வேலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் நினைவுபரிசாக செங்கோல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்