மீனாட்சி அம்மன் கோவில் அன்னதான கூடத்துக்கு மத்திய அரசு நற்சான்றிதழ்- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அன்னதான கூடத்திற்கு சுத்தமான, சுகாதாரமான அன்னதான கூடம் என்று மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது.. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோவில் துைண கமிஷனரிடம் வழங்கினார்.

Update: 2023-02-27 21:09 GMT


மதுரை மீனாட்சியம்மன் கோவில் அன்னதான கூடத்திற்கு சுத்தமான, சுகாதாரமான அன்னதான கூடம் என்று மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது.. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோவில் துைண கமிஷனரிடம் வழங்கினார்.

மீனாட்சி அம்மன் கோவில்

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு முதலில் மதியம் நேரம் மட்டும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. அரசு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் நாள்தோறும் அன்னதானம் திட்டத்தை தொடங்கி வைத்தது.

அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை முதல் இரவு வரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்டு வருகிறார்கள். இதற்காக பழைய அன்னதான கூடம் மாற்றி அமைக்கப்பட்டு நவீன முறையில் உருவாக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்குவதற்காக அரசின் உத்தரவின்படி கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

இந்த நிலையில் மத்திய அரசின் குடும்பநல அமைச்சகத்திற்கு உட்பட்ட உணவுப்பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய அதிகாரிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அன்னதான கூட்டத்தை தொடர்ச்சியாக ஆய்வு செய்தனர்.

அதில் அன்னதான கூடத்தில் சுத்தம், சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவது குறித்தும், அங்கு உணவு தயாரிக்கும் முறைகள், உணவுக்கு தேவையான தரமான பொருட்கள், தயார் செய்த உணவுகளை பக்தர்களுக்கு பரிமாறுவது குறித்து என அனைத்தையும் ஆய்வு செய்தனர். இது தவிர உணவை பரிமாறுபவர்கள் அனைவருக்கும் மருத்துவ சான்றிதழ் மற்றும் சுத்தமான, சுகாதாரமான உணவா? என ஆய்வகத்தில் பரிசோதனையும் செய்யப்பட்டது.

மத்திய அரசு நற்சான்றிதழ் விருது

அதை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அன்னதான கூடம் சுத்தமான, சுகாதாரமான அன்னதான கூடம் என்று உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மத்திய அரசின் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை நிதியமைச்சர் பி,்டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் துணை கமிஷனர் அருணாசலத்திடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து கோவில் முழுவதும் சுற்றி பார்த்தார். இந்தநிலையில் மீனாட்சியம்மன் கோவில் அன்னதான கூடத்திற்கு மத்திய அரசின் நற்சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்