உலகின் மிகப் பிரமிப்பான புதையல் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றாண்டு தினம்

தொல்லியல் ஆய்வாளர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில், பழங்கால மக்கள் பயன்படுத்திய ஏராளமான அரிய பொருள்களையும், மண்ணுக்குள் புதைந்து கிடந்த தங்கம், வைரம், வைடூரியம் போன்ற மதிப்பு மிக்க பொருள்களையும் தோண்டி எடுத்து இருக்கிறார்கள்.

Update: 2022-11-04 07:17 GMT

உலகம் முழுவதும் கிடைத்த தொல்பொருள் புதையல்களிலேயே மிக அதிகமான மதிப்புக் கொண்ட புதையல் தோண்டி எடுக்கப்பட்ட நூற்றாண்டு தினம், இன்று (வெள்ளிக்கிழமை) பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.



அந்தப் பிரமாண்ட புதையலின் சொந்தக்காரர், எகிப்து மன்னர் டூடங்காமன்.

10 வயதில் மன்னராகப் பதவி ஏற்று, 19-வது வயதில் மர்மமான முறையில் மரணத்தைத் தழுவியவர், டூடங்காமன்.

3,363 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.மு. 1341-ஆம் ஆண்டு, எகிப்து மன்னர் குடும்பத்தின் 18-வது பரம்பரையில் பிறந்தவர் டூடங்காமன்.

தந்தை அகெனாடென் திடீர் என்று மரணம் அடைந்ததால், டூடங்காமன், 10 வயதில் மன்னர் பொறுப்பு ஏற்றார். எகிப்து மன்னர் குடும்ப வழக்கப்படி தனது சகோதரியைத் திருமணம் செய்து கொண்ட டூடங்காமன், 19-வது வயதில், கி.மு. 1323-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

அவர் கொலை செய்யப்பட்டாரா? விபத்து அல்லது நோய் காரணமாக இறந்தாரா? என்பது இன்னும் ஆய்வில் இருக்கிறது.

மரணம் அடைபவர்களின் ஆன்மா அழியாது; அந்த ஆன்மா வேறு உடலை எடுத்துக் கொண்டு மறு உலகில் வாழும் என்ற நம்பிக்கை காரணமாக எகிப்து மக்கள், மரணம் அடைபவர்களின் உடல்களை எரிப்பது இல்லை.

பல்வேறு மூலிகைகள், ரசாயன திரவங்களைக் கொண்டு, இறந்தவரின் உடலைப் பதப்படுத்தி சவப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடுவார்கள்.



அப்படிப் பாதுகாக்கப்பட்ட உடல்கள், 'மம்மி' என்று அழைக்கப்பட்டன.

பழங்கால மன்னர்களின் மம்மிகள் புதைக்கப்பட்ட கல்லறைகளில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு எகிப்தின் வரலாற்றை எழுத முயன்ற ஆய்வாளர்கள், அந்தக் கல்லறைகள் எங்கே இருக்கின்றன என்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆட்சி செய்த பல மன்னர்கள் மற்றும் ராணிகளின் கல்லறைகள், தீப்ஸ் என்று முன்னர் அழைக்கப்பட்ட லக்ஸார் நகரின் பாலைவனப் பகுதியில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.

அங்கே மன்னர்கள் புதைக்கப்பட்ட இடம், மன்னர்களின் பள்ளத்தாக்கு (கிங்ஸ் வேல்லி) என்றும், ராணிகளின் கல்லறைகள் இருந்த இடம், ராணிகளின் பள்ளத்தாக்கு (குயீன்ஸ் வேல்லி) என்றும் அழைக்கப்படுகின்றன. 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல மன்னர்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கடைசி பரம்பரை மன்னரும், மர்மமாக இறந்தவருமான டூடங்காமன் என்பவர் கல்லறை இருக்கும் இடம் மட்டும் எங்கே இருக்கிறது என்பது எவருக்கும் தெரியவில்லை.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹோவர்டு கார்ட்டர் என்பவர், 17 வயதில் எகிப்து நாட்டுக்குச் சென்று, அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்லறைகளில் உள்ள கல்வெட்டு மற்றும் சித்திர எழுத்துக்களைப் பதிவு செய்யும் பணியைச் செய்தார்.

டூடங்காமன் பற்றி அறிந்த கார்ட்டர், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கோடீசுவரரான கார்னர்வன் ஜார்ஜ் ஹெர்பெர்ட் என்பவரின் பண உதவியுடன், மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதியில், டூடங்காமன் கல்லறையைப் பல ஆண்டுகளாகத் தேடினார்.

மிகச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1922-ஆம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி, டூடங்காமன் கல்லறையை கார்ட்டர் கண்டுபிடித்தார்.

3,300 ஆண்டுகளாக மூடிக் கிடந்த அந்தக் கல்லறையைத் திறந்து பார்த்தபோது, அலிபாபா குகைப் புதையல்போல, அங்கே ஏராளமான பொக்கிஷங்கள் குவிந்து கிடந்தன.

மன்னர் டூடங்காமன் மம்மியும் இருந்த அந்தக் கல்லறையில் காணப்பட்ட பெரும்பாலான பொருள்கள், தங்கத்தால் செய்யப்பட்டு மினுமினுத்தன.

டூடங்காமன் சவப் பெட்டி, தங்கத் தகடுகள் போர்த்தப்பட்ட இரண்டு அடுக்கு மரப் பெட்டிகளுக்குள் இருந்தது. உடல் இருந்த சவப் பெட்டி முழுவதும் 110 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு பளபளத்தது.

டூடங்காமன் முகம், 10 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தால் மூடப்பட்டு இருந்தது.



இது தவிர, அந்தக் கல்லறையில் இருந்த 5,398 பொருள்களில், சிம்மாசனங்கள், செருப்பு உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவை தங்கத்தால் செய்யப்பட்டு ஆச்சரியப்படுத்தின.

ஆய்வு நடத்திய கார்ட்டரிடம், டூடங்காமன் கல்லறையில் கிடைத்த பொக்கிஷங்களின் மொத்த மதிப்பு என்ன என்று நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு கார்ட்டர், 'அந்தப் பொக்கிஷங்களின் மதிப்பு மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டது' என்று தெரிவித்தார்.

டூடங்காமன் கல்லறையில் கிடைத்த பொருள்கள், உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு, கண்காட்சிகள் நடத்தப்பட்டன. உலகத் தலைவர்கள் உள்பட ஏராளமானவர்கள் அந்தப் பொருட்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 7 லட்சம் பேரும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 14 லட்சம் பேரும் இந்தக் கண்காட்சியைப் பார்த்ததாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

டூடங்காமன் மம்மியில் இருந்த முகக் கவசம், சிறு பிசிறுகூட இல்லாமல் மிக நேர்த்தியாகத் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அந்த முகக் கவசத்தையும், தங்கத்தால் ஆன மற்ற பொருள்களையும் எவ்வாறு செய்தார்கள் என்பது இன்றளவும் வியப்பாக உள்ளது.

அனைவரையும் கவர்ந்த டூடங்காமன் மம்மி முகக் கவசம், இப்போது எகிப்து நாட்டின் அடையாளச் சின்னம் போலப் போற்றப்படுகிறது.

டூடங்காமன் கல்லறைப் பொக்கிஷங்கள் இவ்வளவு சிறப்பு வாய்ந்தவை என்பதால், அந்தக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகும் இந்த நாளை, எகிப்து அரசு, பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடுகிறது.



தங்கப் புதையல் என்ன?

டூடங்காமன் கல்லறையில் கிடைத்த, விலை மதிப்பு மிக்க புதையல் பொருள்கள் சிலவற்றின் விவரம் -

* 10 கிலோ எடையுள்ள தங்க முகக் கவசம். (இதன் மீது வைரம், வைடூரியக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன).

* 110 கிலோ எடை கொண்ட தங்கச் சவப் பெட்டி.

* தங்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனங்கள்.

* தங்கக் கிரீடம்.

* கருஞ்சிறுத்தை மீது நிற்கும் டூடங்காமன் தங்கச் சிலை.

* டூடங்காமன் உடல் பாகங்களைக் கொண்ட ஜாடிகள் வைக்கப்பட்டு இருந்த தங்கப் பெட்டி.

* தங்கச் செருப்பு.

* தங்கத்தால் செய்த விசிறி.

* தங்க முலாம் பூசப்பட்டு மரத்தால் செய்யப்பட்ட பசு மாட்டின் முகம்.

* தங்கத்தால் ஆன புலியின் முகச் சிற்பம்.

* தங்கத் தகடுகளால் செய்யப்பட்ட சாரட் வண்டியின் பாகங்கள்.

* தங்கப் படுக்கை.

* தமிழகத்தின் பழங்கால ஆயுதமான வளரிகள்.

(இவை தவிர தந்தம் மற்றும் பளிங்கினால் செய்யப்பட்ட கலைப் பொருள்கள், கையுறை, உள்ளாடை, கைத்தடிகள், விளையாட்டுக் கருவிகள் உள்ளிட்ட பல பொருள்கள் இந்தப் புதையலில் கிடைத்தன).

Tags:    

மேலும் செய்திகள்