மலை கிராமத்தில் சிமெண்ட் பாதை அமைப்பு

கோத்தகிரி அருகே மலை கிராமத்தில் நடைபாதை வசதி இல்லாமல் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சிமெண்ட் பாதை அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-10-17 18:45 GMT

கோத்தகிரி அருகே மலை கிராமத்தில் நடைபாதை வசதி இல்லாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சிமெண்ட் பாதை அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வனவிலங்குகள் நடமாட்டம்

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்டது வட்டப்பாறை. இந்த கிராமம் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் உள்ள வெஸ்ட்புரூக் கிராமத்தில் இருந்து பெத்தளா செல்லும் சாலையில் உள்ளது. இங்கு 30 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அப்பகுதியில் சாலை வசதி இல்லை.

பிரதான சாலையான வட்டப்பாறை முடக்கில் இருந்து 300 மீட்டர் தொலைவிற்கு தனியார் தேயிலை தோட்டம் வழியாக கிராம மக்கள் தங்களது வீடுகளுக்கு சென்று வந்தனர். பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் தினமும் பணிக்கும், பள்ளிக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் தேயிலை தோட்டங்கள் வழியாக செல்லும் ஒற்றையடி பாதையையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். மேலும் சாலை வசதி இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் கூட அங்கு செல்ல முடியாத காரணத்தால், நோயாளிகளை தொட்டில் கட்டி சுமந்து செல்லும் நிலை இருந்தது.

சிமெண்ட் பாதை அமைப்பு

இதனால் கிராம மக்கள் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தனியார் நிலமாக இருந்ததால் சாலை, நடைபாதை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து 13.4.2023-ந் தேதி 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதையடுத்து நடுஹட்டி ஊராட்சி சார்பில், வட்டப்பாறை கிராமத்திற்கு 300 மீட்டர் நீளத்திற்கு 6 அடி அகல நடைபாதை அமைக்க 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் நடுஹட்டி ஊராட்சி தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் தனியாரிடம் கலந்து பேசி வட்டப்பாறை கிராமத்திற்கு செல்ல நடைபாதை அமைக்க தேவையான நிலத்தை பெற்றனர். தொடர்ந்து ஆட்டோ செல்லும் வகையில் 6 அடி அகல சிமெண்ட் பாதை அமைக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்