அவினாசியை அடுத்த குப்பண்டம்பாளையத்தை சேர்ந்த நடராஜ் மகன் மனோஜ் (வயது 17). இவர் நேற்று நடுவுச்சேரி பிரிவில் தரைப்பாலத்தில் அமர்ந்து கொண்டு தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஒரு மர்ம ஆசாமி மனோஜிடம் ரங்கா நகர் செல்வதற்கு வழி எது என்று கேட்டார். தனது செல்போனை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு மனோஜ் அந்த நபருக்கு வழி சொல்லிகொண்டிருந்தார்.
அப்போது அந்த ஆசாமி திடீரென மனோஜின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு குப்பாண்டம்பாளையம் ரோட்டில் ஓடினார். உடனே மனோஜ் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டுக்கொண்டே அவரை துரத்திச்சென்றார். அப்போது அக்கம்,பக்கத்தில் இருந்தவர்களும் ஓடி வந்து அந்த நபரை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் மகன் முனியசாமி (வயது 24) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவினாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.