சாலையில் செல்பவர்களிடம் செல்போனை பறித்து செல்லும் மர்ம ஆசாமிகள்

திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் சாலையில் செல்பவர்களிடம் மர்ம ஆசாமிகள் செல்போனை பறித்து செல்கின்றனர். இதுபோன்ற தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2022-07-23 14:24 GMT


திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் சாலையில் செல்பவர்களிடம் மர்ம ஆசாமிகள் செல்போனை பறித்து செல்கின்றனர். இதுபோன்ற தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குற்றச்செயல்கள்

தொழில்நகரமான திருப்பூரில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் வடமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிகின்றனர். பல தரப்பு மக்களும் வசிப்பதால் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, விபத்து உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம்.

இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதையும் தாண்டி பல்வேறு குற்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் சாலையில் தனியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போலீசில் புகார்

மர்ம ஆசாமிகள் சிலர் மோட்டார்சைக்கிளில் வந்து செல்போனை பறிப்பதும், ஒருசிலர் நடந்து வந்து செல்போனை பறித்து விட்டு ஓட்டம் பிடிப்பதும் வழக்கமாக உள்ளனர். செல்போனை கொடுக்குமாறு மிரட்டும் மர்ம ஆசாமிகள் கேட்டதும் கொடுக்கவில்லையென்றால் செல்போனை வைத்திருப்பவர்களை தாக்குவதற்கும் அஞ்சுவதில்லை. செல்போனை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்து மாயமாகி விடுகின்றனர்.

அந்த மர்ம ஆசாமிகள். கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் செல்போனை பறி கொடுக்கும் பொதுமக்களில் சிலர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கின்றனர். போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க சென்றால் செல்போன் வாங்கிய பில் உள்பட பல்வேறு தகவல்களை போலீசார் கேட்பதால், பலர் புகார் தெரிவிக்காமலேயே விட்டு விடுகின்றனர்.

செல்போன் பறிப்பு

திருப்பூர் மாநகரில் தினமும் சராசரியாக 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலானவர்கள் போலீசில் புகார் கொடுக்க முன்வருவதில்லை. ஒருசில சம்பவங்கள் நகரின் வெளிப்புறங்களில் நடந்தாலும் ஏராளமான சம்பவங்கள் மாநகரின் மையப்பகுதி, முக்கிய வீதிகள் மற்றும் பட்டப்பகலில் நடைபெறுவதுதான் அதிர்ச்சிகரமான தகவலாக உள்ளது. பெரும்பாலான வழிப்பறி சம்பவங்களில் 23 வயதுக்குட்பட்ட வாலிபர்களே அதிகமாக ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் மூழ்கி உள்ளனர்.

கடுமையான நடவடிக்கை

எனவே போலீசார் ரோந்து பணியில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன், செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்