செல்போன் கோபுரம் பழுதால்தொலை தொடர்பு வசதியின்றி தவிக்கும் மலைக்கிராம மக்கள்
சின்னமனூர் அருகே செல்போன் கோபுரம் பழுதானதால் தொலை தொடர்பு வசதியின்றி மலைக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.;
மேகமலை வனப்பகுதி
சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு ஆகிய 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தேயிலை தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
இங்கு ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால் பச்சைபசேல் என காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள் மற்றும் சீதோஷ்ண நிலையை அனுபவிப்பதற்காக தினமும் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த பகுதியில் தொலை தொடர்பு வசதிக்காக பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
செல்போன் கோபுரம் பழுது
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு செல்போன் கோபுரம் பழுதடைந்தது. இதனால் தொலை தொடர்பு வசதியின்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் அவசர தேவைக்காக ஆஸ்பத்திரி செல்வதற்காக ஆம்புலன்சை கூட அழைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறும்போது, தொலை தொடர்பு வசதிக்காக இங்கு பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் கோபுரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கல்வி பயில முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் தனியார் தோட்ட குடியிருப்பில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு பேச முடியாமல் உள்ளனர். இன்பமாக தேயிலை தோட்டங்களை கண்டு ரசிக்கலாம் என்று சுற்றுலா வந்தவர்கள் சிக்னல் கிடைக்காததால் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பழுதான செல்போன் கோபுரத்தை சீரமைத்து தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.