வேப்பூர் கூட்டு ரோட்டில் உள்ள செல்போன் கடையில் கொள்ளை; வாலிபர் கைது
வேப்பூர் கூட்டு ரோட்டில் உள்ள செல்போன் கடையில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
வேப்பூர்,
ரூ.2 லட்சம்-செல்போன்கள் கொள்ளை
வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி அனிதா. இவர் வேப்பூர் கூட்டு ரோட்டில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். அனிதா குடும்ப செலவுக்காக தனது நகைகளை வேப்பூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்து, அதில் கிடைத்த ரூ.2 லட்சத்தை நேற்று முன்தினம் செல்போன் கடையில் வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அனிதா கடையை பூட்டிவிட்டு உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.
பின்னர் அவர் வழக்கம்போல் நேற்று காலை கடையை திறந்து பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்களை காணவில்லை. அனிதா கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
வாலிபர் கைது
பணம், செல்போன்கள் கொள்ளை போனதை அறிந்து பதறிய அனிதா இதுபற்றி வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் கொள்ளை நடந்த செல்போன் கடைக்கு விரைந்து வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடியை சேர்ந்த செல்வகுமார் மகன் உதயகுமார் என்பவர் பணம், செல்போன்களை கொள்ளையடித்து தெரியவந்தது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்துக்கு ஆலிச்சிக்குடியை சேர்ந்த கதிர்வேல் மகன் சடையன் என்கிற பரமசிவன்(வயது 23) என்பவர் உடந்தையாக இருந்ததும், கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை 2 பேரும் சேர்ந்து ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ஆலிச்சிக்குடியில் பதுங்கி இருந்த பரமசிவனை கைது செய்து, அவரிடம் இருந்து 7 செல்போன்களை மீட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய உதயகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.