செல்போன் செயலி மூலம் விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம்

ராசிபுரத்தில் செல்போன் செயலி மூலம் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றும் செய்வது குறித்து அதிகாரிகளுடன், கலெக்டர் உமா ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-06-01 18:45 GMT

ராசிபுரம்

செல்போன் செயலி

ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம் கிராமத்தில் செல்போன் செயலி மூலம் கிரெய்ன்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் அடிப்படை விவரங்களை பதிவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் செல்போன் செயலி மூலம் கிரெய்ன்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் அடிப்படை விவரங்களை பதிவேற்றும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் உமா ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வேளாண் அடுக்கக திட்டமான கிரெய்ன்ஸ் வலைதளம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பதிவு செய்து பயன் அடைய வேண்டும். இந்த வேளாண் அடுக்ககம் கிரெய்ன்ஸ் வலைதளம் உருவாக்குவதன் மூலம் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் விவரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல், மற்றும் நில உடைமை வாரியாக பயிர் சாகுபடி விவரம் ஆகிய அடிப்படை விவரங்களுடன் கிரெய்ன்ஸ் வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வலைதளத்தில் விவசாயிகள் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் துறை உள்பட 13 துறைகள் இணைக்கப்பட உள்ளது. இந்த வலைதளத்தின் மூலம் அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிக்குச் சென்றடைவதை உறுதி செய்ய முடியும். இவை ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும்போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

நலத்திட்ட உதவிகள்

விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவைகளை தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இதனை நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரை அணுகி கிரெய்ன்ஸ் வலைதளத்தில் தங்களின் அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ராசிபுரம் தாசில்தார் சுரேஷ், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்