சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு அறை
அருப்புக்கோட்டையில் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு அறையை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் திறந்து வைத்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பு அறையை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் திறந்து வைத்தார்.
கட்டுப்பாட்டு அறை
அருப்புக்கோட்டையில் குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் நகர் பகுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கேமராக்களை கண்காணிப்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் முயற்சியில் நன்கொடையாளர்கள் உதவியுடன் புதிதாக கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் தலைமை தாங்கினார்.
திறப்பு விழா
டவுன்இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் கலந்து கொண்டு கட்டுப்பாட்டு மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமரா மானிட்டரை திறந்து வைத்து கேமரா காட்சிகளையும், கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கண்காணிப்பு அறை அமைப்பதற்கு நிதி உதவி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
குற்றச்செயல்கள்
நகரின் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டால் குற்றச் செயல்கள் தடுக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேபோல் செயின் பறிப்பு சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காணவும், போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட முயல்பவர்களை எளிதாக அடையாளம் காணவும் கண்காணிப்பு கேமரா பெரிதும் உதவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அருப்புக்கோட்டை உட்கோட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.