சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் புதிய சாட்சியை சேர்க்க கோரி சி.பி.ஐ. மனு- மதுரை கோர்ட்டில் விரைவில் விசாரணை

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் புதிய சாட்சியாக பிரபு என்பவரையும் சேர்க்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. சார்பில் மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Update: 2023-07-24 21:04 GMT


சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் புதிய சாட்சியாக பிரபு என்பவரையும் சேர்க்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. சார்பில் மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இரட்டைக்கொலை வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரையும் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை போலீசார் கடுமையாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர்களை, கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு காயங்களால் அவதிப்பட்ட அவர்களை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இதுகுறித்து சி.பி.ஐ. இரட்டைக்கொலை வழக்குபதிவு செய்தது. இந்த கொலை வழக்கில் சாத்தான்குளத்தின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. பல்வேறு முக்கிய சாட்சிகள் கோர்ட்டில் ஆஜராகி, சாட்சியம் அளித்து வருகின்றனர்.

புதிய சாட்சி

இந்தநிலையில் இந்த வழக்கு அதே கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நேற்றைய தினம் ஆஜராக வேண்டிய எய்ம்ஸ் டாக்டர் வரவில்லை. இதனால் இந்த வழக்கு வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜின் கடைக்கு அருகில் பிரபு என்பவரும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜெயராஜையும், பென்னிக்சையும் அவர்களின் கடையில் இருந்து போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று உள்ளனர்.

இந்த சம்பவம் பிரபுவின் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில்தான் பதிவாகி இருந்தது. அந்த பதிவுகளின் அடிப்படையில்தான் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. எனவே அவரது கடை கேமரா பதிவுகள் குறித்து பிரபுவிடம் விசாரணை நடத்துவது அவசியம். இதன் காரணமாக அவரையும் இந்த வழக்கின் சாட்சியாக சேர்க்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

விசாரணை

இந்த மனுவை அனுமதிப்பது தொடர்பான விசாரணை வருகிற 4-ந்தேதி நடக்கும் என்றும் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்