சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. மேலும் பரனூர் சுங்கச்சாவடி வீடியோ நிகழ்வுகளும் பார்வையிடப்பட்டது.;
விழுப்புரம்:
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்தது.
கடந்த 4-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பின் 62-வது சாட்சியான சி.பி.சி.ஐ.டி. முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டரும் தற்போது கடலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருமான சுந்தர்ராஜனிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக கூறி அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தனர். இதையேற்ற விழுப்புரம் நீதிமன்றம், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜனிடம் மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதியளித்தது.
இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜரானார். முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், விழுப்புரம் கோர்ட்டில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் ரவீந்திரன் குறுக்கு விசாரணை செய்தார். இந்த விசாரணையின் முழு விவரங்களை நீதிபதி பதிவு செய்துகொண்டார். பின்னர் விசாரணை முடிந்ததும் பரனூர் சுங்கச்சாவடியில் சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகள் குறித்த சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் தரப்பு வக்கீல்கள் மற்றும் அரசு தரப்பு வக்கீல் முன்னிலையில் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.