மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- ஈரோட்டில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- ஈரோட்டில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு

Update: 2022-08-02 22:19 GMT

ஈரோடு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் தண்டோரா மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

நேற்று மாலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பரந்து விரிந்து செல்கிறது. ஆற்றில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தண்டோரா மூலம் விழிப்புணர்வு

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு தண்டோரா மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், காவிரிக்கரை பகுதியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.

இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், காவிரி ஆற்றில் புனிதநீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்