காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுகிறது- மதுரையில் வைகோ பேட்டி

காவிரி விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுகிறது என மதுரையில் வைகோ கூறினார்.

Update: 2023-09-23 20:39 GMT


காவிரி விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுகிறது என மதுரையில் வைகோ கூறினார்.

மதுரை வருகை

சென்னையில் இருந்து விமானத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழக அரசுக்கு தொந்தரவு கொடுக்கும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, 50 லட்சம் கையெழுத்து பகுதிகளை நானும், கணேசமூர்த்தியும் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்து இருக்கிறோம்.

தற்போது நடந்திருப்பது சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடராகும். ஏனெனில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த மசோதாவை நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது. இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அதில் தனி ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு

கடந்த 9 ஆண்டு காலமாக மத்திய அரசு என்ன செய்தது? இப்போது தேர்தல் வருவதால் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வந்திருக்கிறார்களே தவிர, இது நீண்ட கால கோரிக்கை. இதில் மோடி மட்டும் பெருமை கொண்டாட முடியாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடக்கவே நடக்காது. பல மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்தில் இடையிலேயே ஒரு ஆட்சி பெரும்பான்மையை இழக்குமானால் அப்போது நாடாளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்துவார்களா?. இதில் பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.

எனவே பல மாநிலங்களை உள்ளடக்கிய உபகண்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை.

ஏற்புடையதல்ல

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுப்பது ஏற்புடையதல்ல. சுப்ரீம்கோர்ட்டை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுகிறது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மதுரையில் நடந்த ம.தி.மு.க. மாநாட்டில் முக்கிய அறிவிப்பு வரும் என்று கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, மாநாட்டில் என் பேச்சிலேயே முக்கிய அறிவிப்பு இருக்கிறது என வைகோ கூறிச்சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்