உரிய ஆவணங்கள் இன்றி விற்ற முந்திரி பருப்பு, பிஸ்தா பறிமுதல்

பாளையங்கோட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி விற்பனை செய்யப்பட்ட முந்திரி பருப்பு, பாதம், பிஸ்தா, பேரீச்சம் பழம் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-08-03 19:20 GMT

பாளையங்கோட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி விற்பனை செய்யப்பட்ட முந்திரி பருப்பு, பாதம், பிஸ்தா, பேரீச்சம் பழம் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

பாளையங்கோட்டை மண்டலப்பகுதியில் தரம் குறைந்த அண்டிப்பருப்பு (முந்திரி), பாதாம், பிஸ்தா மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக, உணவுப் பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையொட்டி மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் நேற்று பாளையங்கோட்டை, திருச்செந்தூர் ரோட்டில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது சாலையோரத்தில் கேரள மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்றில் ஷேக்முஜீப் ரஹ்மான் என்பவர் விற்பனை செய்து கொண்டிருந்த அண்டிப்பருப்பு, பாதாம், பிஸ்தா மற்றும் பேரீச்சம்பழம் பாக்கெட்டுகளை ஆய்வு செய்தனர்.

அந்த உணவுப்பொருள் பொட்டலமிடப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டபோதும், அவற்றின் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின்படி கண்டிப்பாக அச்சிடப்பட வேண்டிய லேபிள் விவரங்கள் ஏதுமில்லாமல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அந்த பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

பறிமுதல்

இதுதொடர்பாக பலமுறை நேரில் அறிவுறுத்தியும் எச்சரிக்கை செய்த போது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தைக் கொண்டு சென்று, தொடர்ந்து அவற்றை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து வியாபாரியிடம் இருந்து அண்டிப்பருப்பு -7.650 கிலோ, பாதாம் -1.400 கிலோ, பிஸ்தா-1¾ கிலோ மற்றும் பேரீச்சம்பழம்-1 கிலோ (மொத்தம்-11.800 கிலோ) உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அண்டிப்பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் தரம் குறித்து பரிசோதனை செய்ய மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கும் அனுப்பி வைத்தனர். ஆய்வு அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகார் அளிக்கலாம்

பொதுமக்கள் இத்தகைய உணவுப்பொருட்களை விலை குறைவு என்பதற்காக வாங்கி ஏமாற வேண்டாம். தரமற்ற உணவுப் பொருட்கள் பற்றிய புகார்கள் ஏதும் இருந்தால், 94440 42322 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சசிதீபா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்