ஜவுளிக்கடையில் ரூ.1¼ லட்சம் - பட்டுசேலைகள் திருட்டு

திருத்துறைப்பூண்டியில் ஜவுளிக்கடையில் ரூ.1¼ லட்சம் - பட்டுசேலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-08-19 17:33 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டியில் ஜவுளிக்கடையில் ரூ.1¼ லட்சம் - பட்டுசேலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஜவுளிக்கடை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காந்தி முதலியார் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது58). இவர் திருத்துறைப்பூண்டியில் ஜவுளிக்கடை, திருமணமண்டபம், டைல்ஸ் ஷோரூம் மற்றும் டிராவல்ஸ் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது. இந்த கடையை நேற்று இரவு 10 மணியளவில் பூட்டிவிட்டு ஊழியர்கள் அனைவரும் சென்று விட்டனர். காலையில் கடையை திறக்க மேலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் வந்தனர். அப்போது கடையை திறந்த போது கடையின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

பணம்- பட்டு சேலைகள் திருட்டு

இது குறித்து கடை உரிமையாளர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்போில் அவர் கடைக்கு வந்து பார்த்த போது கடையில் இருந்த ரூ.1¼ லட்சம் மற்றும் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பட்டுசேலைகள் திருட்டுப் போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் ராஜேந்திரன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் ஜவுளிக்கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம்- பட்டுசேலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்