திறன் மேம்பாட்டு பணியாளர்களுக்கு பண பலன்கள்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பணியாளர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
ஊட்டி,
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பணியாளர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பணியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கணேச பாண்டியன் வரவேற்றார். மாநில பொது செயலாளர்கள் லட்சுமிகாந்தன், வேலாயுதம், மாநில இணை செயலாளர் ராஜ்குமார், மண்டல தலைவர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகங்களிலும், இதர துணை இயக்குனர் பணியிடங்கள் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது உள்ள நிர்வாக அலுவலர் பணியிடங்களை துணை இயக்குனர் (நிர்வாகம்) பணியிடமாக மேம்படுத்த வேண்டும். விதிகளுக்கு உட்பட்டு உதவியாளர் பணியிடங்கள் இல்லாத இதர ஐ.டி.ஐ.க்களில் நிர்வாக அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.
பதவி உயர்வு
பணிமனை உதவியாளராக பணிபுரியும் பணியாளர் 3 ஆண்டுகள் பணிநிறைவு செய்ததும் அடுத்த பதவி உயர்வுக்கு தகுதி பெறுவது போல், அடிப்படை பணியாளர்கள், அலுவலக உதவியாளர் உரிய கல்வித் தகுதி இருக்கும் பட்சத்தில் 7 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகளாக குறைத்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அனைத்து நிலையில் உள்ள பணியாளர்களுக்கு சரண்டர் மற்றும் அகவிலைப்படி, நிலுவைத்தொகை உள்ளிட்ட பண பலன்களை வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடுத் திட்டத்தை ரூ.10 லட்சம் வரை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கக்கூடிய சம்பளம், ஜிபிஎப் கடன் மற்றும் இதர பணப்பலன்கள் ஆகியவற்றை கருவூலத்துறை மூலம் மாநில அரசே நடைமுறைப்படுத்த வேண்டும்.தொகுப்பூதிய துப்புரவு பணியாளர், சுகாதாரப்பணியாளர், தண்ணீர் எடுப்பவர் ஆகியோருக்கு மாத தொகுப்பூதியம் ரூ.8,000 ஆக உள்ளதை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மண்டல செயலாளர் ரவிகுமார் நன்றி கூறினார்.