28 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலத்தை மீட்க கோரி வழக்கு -ஐகோர்ட்டு நோட்டீஸ்
வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 28 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வேதாரண்யேஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில் பாடப்பட்ட தலம் ஆகும். இந்த கோவிலுக்கு, 28 ஆயிரத்து 609 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது.
சோழர், பாண்டியர், விஜயநகர பேரரசு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பக்தர்களால் பல ஆயிரம் ஏக்கர் நிலம் தானமாக இந்த கோவிலுக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது.
47 ஆயிரம் ஏக்கர் மாயம்
சுப்ரீம் கோர்ட்டும், இந்த ஐகோர்ட்டும், கோவில் நிலங்கள் மத ரீதியான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், இந்த கோவிலுக்கு சொந்தமான பெரும்பாலான நிலம், நில ஆக்கிரமிப்பாளர்கள் வசமும், ஆக்கிரமிப்பாளர்கள் வசமும் இருப்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும். இவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாயாகும்.
தமிழ்நாடு சட்டசபையில் 1985-87-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்க புத்தகத்தில் வழிப்பாட்டு தலங்களுக்கு சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலம் தமிழ்நாட்டில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 2018-19-ம் ஆண்டுக்கான அறிக்கையில் 4.78 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சுமார் 47 ஆயிரம் ஏக்கர் நிலம் மாயமாகி உள்ளது.
மீட்க வேண்டும்
இதனால், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 28 ஆயிரத்து 609 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, அளவீடு செய்யக்கோரி கடந்த 2021-ம் ஆண்டு அறநிலையத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இதன்படி குழு அமைக்கப்பட்டது. அதில் இடம் பெற்றவர்கள் வெறும் 100 ஏக்கர் நிலத்தை மட்டுமே கண்டறிந்து அளவீடு செய்துள்ளனர்.
மிகப்பெரிய அளவிலான நிலம் என்பதால், வருவாய்த்துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளை கொண்டு குழு அமைத்தால்தான் இந்த நிலங்களை மீட்க முடியும். எனவே, வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 28 ஆயிரத்து 609 ஏக்கர் நிலத்தை மீட்கவும், அந்த நிலங்களை அடையாளம் கண்டு, அளவீடு செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
பதில் அளிக்க வேண்டும்
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு தலைமை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.