காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 89 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு- தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை

காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 89 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-10-02 21:46 GMT

காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 89 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திடீர் சோதனை

ஈரோடு தொழிலாளர் துறை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி, ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோரின் அறிவுரைப்படி, ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் மாவட்ட துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளதா? என்று சோதனை செய்தனர்.

89 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட 106 நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சில நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காததும், தொழிலாளர்களிடம் முன் அனுமதி பெறாமல் பணியில் அமர்த்தியதும் தெரியவந்தது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 36 கடைகள், 49 உணவகங்கள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 89 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்