பள்ளி பணியாளர்களுக்கு கொலை மிரட்டல்; ஆசிரியர் மீது வழக்கு
தேனி அருகே தனியார் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ் (வயது 39). இவர், குமணன்தொழு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் நாகலாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியில் அவருடைய மகனுக்கும், சக மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை விசாரிக்க அந்த பள்ளிக்கு அருண்பிரகாஷ் சென்றார். அப்போது அவர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி முதல்வர் செந்தில்குமார் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், அருண்பிரகாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.