6 ஆண்டுகளாக சமையல்காரருக்கு சம்பளம் வழங்காத வழக்கு - சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை

ஆதி திராவிடர் நல வாரிய சமையல்காரருக்கு 6 ஆண்டுகளாக சம்பளம் வழங்காத வழக்கில் சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-29 16:31 GMT

சென்னை,

ஆதி திராவிடர் நல வாரிய சமையல்காரருக்கு 6 ஆண்டுகளாக சம்பளம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல வாரியத்தில் சமையல்காரராக உள்ள தனக்கு, 2017 டிசம்பர் 1-ம் தேதி முதல் சம்பளம் வழங்கப்படாததால், தனது சம்பள பாக்கியை வழங்க ஆதி திராவிடர் நலத்துறைக்கு உத்தரவிடக் கோரி மூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சம்பளத்தை வழங்க வேண்டுமென 2020-ம் ஆண்டு செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி, மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி மற்றும் சிறப்பு தாசில்தார் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மூர்த்தி தொடர்ந்தார். இந்த அவமதிப்பு வழக்கில், தாசில்தார் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜராகியிருந்த சிறப்பு தாசில்தாரர் ஜாகிர் உசேன், வேறு இடத்திற்கு தான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, சம்பளம் வழங்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகு, ஓராண்டு காலம், சேலம் சிறப்பு தாசில்தாராகவே அவர் பணியாற்றியுள்ளதை சுட்டிக்காட்டி, உத்தரவை அமல்படுத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார். சம்பளம் வழங்காமல் இருந்தால் மனுதாரரின் வாழ்வாதாரம் என்னாவது? குழந்தைகளின் படிப்பு, குடும்ப நிலையை எப்படி சமாளிப்பார்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, சிறப்பு தாசில்தாரரின் நிபந்தனையற்ற மன்னிப்பையும் ஏற்க மறுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறப்பு தாசில்தார் ஜாஹீர் உசேனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்ததற்காக அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு பதிவாளருக்கும் நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்