பஸ்-லாரி மோதல் விபத்து காரணமாக சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்கு
பஸ்-லாரி மோதல் விபத்து காரணமாக சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் பஸ் மீது லாரி மோதியதில் 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்திற்கு முக்கிய காரணம் லாரிகள் தடை செய்யப்பட்ட நேரங்களில் இயக்கப்படுவதுதான் எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த ரெங்கநாதன்(வயது 55), கொளஞ்சிநாதன்(40), சிவக்குமார்(39), ஜெயபால்(42,) தனவேல்(46), கொளஞ்சி(40), சிவகுமார்(42) உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் ரெங்கநாதன் உள்பட 20 பேர் மீது விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.