மன்னிப்பு கோரியதை அடுத்து மத்திய மந்திரி ஷோபா மீதான வழக்கு ரத்து
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத்திய இணை மந்திரி ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியதை அடுத்து அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களுக்கு தொடர்பு உள்ளது என மத்திய இணை மந்திரி ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா மன்னிப்புக் கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர்தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக மத்திய இணை மந்திரி ஷோபா சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், மந்திரி ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியதை அடுத்து அவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஷோபாவின் மன்னிப்பை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக ஏற்று கொள்வதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.