ஆடு மேய்க்க பயன்படுத்தியவர் மீது வழக்கு
கும்பகோணம் அருகே சிறுவர்களை கொத்தடிமையாக வைத்து ஆடு மேய்க்க பயன்படுத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே சிறுவர்களை கொத்தடிமையாக வைத்து ஆடு மேய்க்க பயன்படுத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகார்
கும்பகோணம் அருகே உள்ள வண்ணக்குடியில் 2 சிறுவர்களை கொத்தடிமையாக வைத்து ஆடுகளை மேய்த்து கொண்டிருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது. அதன் பேரில் சைல்டு லைன் (1098) அமைப்பினர், வருவாய்த்துறையினர், தொழிலாளர் நலத்துறையினர், போலீஸ் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடந்த 6-ந்தேதி விசாரணை நடத்தினர்.
வழக்குப்பதிவு
விசாரணையில், திருவிடைமருதூர் வட்டாரத்தை சேர்ந்த 12 மற்றும் 8 வயதுடைய 2 சிறுவர்கள் தங்களது தந்தை இறந்துவிட்டதால், பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதும், இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் 2 சிறுவர்களையும் கொத்தடிமையாக வைத்து ஆடுகளை மேய்ப்பதற்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களும் மீட்கப்பட்டு அவர்களுக்கு விடுதலை சான்று வழங்கப்பட்டது.
இதுகுறித்து மகாதானபுரம் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் சந்திரசேகரன் மீது திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.