ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்கு
மின்வாரிய ஊழியரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வடகாடு அருகேயுள்ள அணவயல் எல்.என்.புரம் மின் வாரிய அலுவலகத்தில் கடந்த 5 வருடங்களாக போர்மேனாக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 56). இவர் சம்பத்தன்று இரவு அணவயல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட மின் தடையை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த அணவயல் ஊராட்சி மன்றத்தலைவரின் கணவர் சின்னத்துரை (60) என்பவர் லட்சுமணனிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்து தப்பி சென்ற லட்சுமணனை ஆவணம் கைகாட்டி ரவுண்டான பகுதியில் வைத்து மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எல்.என்.புரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில், வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.