ரூ.55½ லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்கு
காட்பாடியில் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமல் ரூ.55½ லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
காட்பாடியில் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமல் ரூ.55½ லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
ஓட்டல் தொடங்க பணம்
காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி மகாலட்சுமி. இவர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு வேலூர் தோட்டப்பாளையம் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்த பாலா மனைவி உமா என்பவர் மகாலட்சுமியிடம் சீட்டு பணம் செலுத்தி வந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சில மாதங்களுக்கு பின்னர் உமா மற்றும் அவருடைய கணவர் பாலா ஆகியோர் மகாலட்சுமியிடம் சென்று, நாங்கள் காட்பாடியில் ஓட்டல் நடத்தி வருகிறோம்.
தற்போது புதிதாக ரெயில்வே கேண்டீன் ஒப்பந்தம் எடுக்க உள்ளதாகவும், பெங்களூருவில் புதிய ஓட்டல் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
அதற்காக அதிகளவு பணம் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் அந்த பணத்தை கொடுத்தால் சில மாதங்களில் அவற்றை இருமடங்காக திருப்பி கொடுப்பதாக கூறி உள்ளனர்.
கணவன்-மனைவி மீது வழக்கு
அதனை நம்பிய மகாலட்சுமி மாத சீட்டு மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பணம் பெற்று ரூ.55 லட்சத்து 55 ஆயிரத்தை கடனாக பாலா-உமா தம்பதியினரிடம் பல்வேறு தவணைகளாக கொடுத்து உள்ளார்.
சுமார் 2 ஆண்டுகளாகியும் பாலா-உமா தம்பதியினர் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி உள்ளனர்.
இதற்கிடையே ஏலச்சீட்டில் பணம் செலுத்தியவர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு மகாலட்சுமிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
அதனால் மகாலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடுத்த பணம் ரூ.55 லட்சத்து 55 ஆயிரத்தை திரும்ப தரும்படி பாலா-உமாவிடம் சென்று கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் இருவரும் பணத்தை கொடுக்க மறுத்ததுடன் மகாலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து பாலா, உமா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.