கவுதம சிகாமணி மீதான வழக்கு: 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

Update: 2024-01-04 09:23 GMT

சென்னை,

கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு கால கட்டத்தில் பொன்முடி கனிம வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவருடைய மகன் கவுதம சிகாமணி மற்றும் அவருடைய நண்பர்கள் பெயரில் செயல்பட்டு வந்த செம்மண் குவாரியில் இருந்து அதிகளவு செம்மண் அள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் தமிழக அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி மற்றும் அவருடைய மகன் கவுதம சிகாமணி, அவருடைய நண்பர்கள் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

இந்த சூழ்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம சிகாமணியை தவிர மற்றவர்கள் ஆஜராகி இருந்தனர்

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராஜ மகேந்திரன் தரப்பில் ஆஜரான வக்கீல் சி.எஸ்.எஸ்.பிள்ளை, தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஆவணங்களில் ஒரு சில பக்கங்களில் உள்ள விவரங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும், அதுகுறித்து அமலாக்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வாதிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணை வருகிற 24-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்