சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்கு
தியாகதுருகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கடந்த 15 நாட்களாக எடை போடாததால், ஆத்திரமடைந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முன்தினம் கூத்தக்குடி-கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வரஞ்சரம் போலீசார் சமாதான பேச்சுவார்தை நடத்தினர். அதன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் சட்ட விரோதமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி, கூத்தக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் செந்தில் ராஜா (வயது 40), பழனியப்பன் (49), ராமதாஸ் (50), சுப்பிரமணியன் (62), ரவிச்சந்திரன் (54) உள்ளிட்ட சிலர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.