புதுக்கோட்டையில் அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்திய 5 பேர் மீது வழக்கு
புதுக்கோட்டையில் அனுமதியின்றி நடத்திய ஆடல்-பாடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரு நாட்களுக்கு முன்பு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் மேடையில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நடனம் ஆடி உள்ளனர். அப்போது அவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்கி உள்ளனர்.
இது தொடர்பான தகராறில் வங்கி அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில், தனியார் வங்கி அதிகாரியான விக்னேஸ்வரன் கொலை தொடர்பாக 2 பேர் கைதாகியுள்ள நிலையில், மேலும் 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஒடுகம்பட்டி மற்றும் ஓ.பள்ளத்துப்பட்டியில் கிராம மக்களிடையே மோதல் இருந்து வந்தநிலையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.