வாலிபரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு
வாலிபரை தாக்கிய சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள கீழத்தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் செல்வமணி(வயது 29). இவர் வீட்டில் ஆயுத பூஜை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சத்தம் போட்டுக் கொண்டு சென்றவர்களிடம், குழந்தைகள் விளையாடுவதால் மெதுவாக செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், தகாத வார்த்தைகளால் செல்வமணி மற்றும் அவருடன் இருந்தவர்களை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து செல்வமணி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற அதே ஊரைச் சேர்ந்த பாலுசாமி மகன் ராஜசேகர் (23), மணிகண்டன் (24) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தாக்குதலில் செல்வமணியுடன் இருந்த செந்தில்வேல் மற்றும் மணிகண்டன் ஆகியோர் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.