ஜெயில் வார்டன் உள்பட 2 பேர் மீது வழக்கு
சங்கரன்கோவில் அருகே தகராறில் ஈடுபட்டதாக ஜெயில் வார்டன் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரபட்டியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஜெயில் வார்டனாக உள்ளார். இவரது மனைவி இளையராணி (வயது 33). இவர்கள் 2 பேரும் மேலநீலிதநல்லூரில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சின்னக்கோவிலான்குளம் வழியாக வந்து கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் கனகராஜ் வேகமாக சென்றதை அவரது மனைவி இளையராணி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ் தனது மனைவி இளையராணியுடன் நடுரோட்டில் பைக்கை நிறுத்தி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த சின்னக்கோவிலாங்குளத்தை சேர்ந்த விவசாயி செந்தூர்பாண்டி, ஏன் பெண்ணிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இதுதொடர்பாக இருதரப்பினரும் சின்னகோவிலாங்குளம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கனகராஜ், செந்தூர்பாண்டி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.