மணம் முடித்து வைக்காததால் காதலிக்கும் தாயிக்கும் சரமாரி கத்திக்குத்து
இணைய தளத்தில் பழகி காதலித்து மணம் முடித்து வைக்காததால் காதலி, தாயை சரமாரியாக கத்தியால் குத்திய காதலன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழக்கரை,
இணைய தளத்தில் பழகி காதலித்து மணம் முடித்து வைக்காததால் காதலி, தாயை சரமாரியாக கத்தியால் குத்திய காதலன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இணைய தளம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி ஊராட்சிக்கு உபட்ட சடைமுனியன் வலசை பகுதியில் வசித்து வரும் 21 வயது பெண்ணுக்கும் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுகரையை சேர்ந்த கார்த்திக் (27) என்பவருக்கும் இணைய தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பெண்ணின் பெற்றோரிடம் பலமுறை தங்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு கார்த்திக் கேட்டுள்ளார். இதனை பெண்ணின் வீட்டார் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
திடீரென்று நேற்று முன்தினம் நள்ளிரவில் சேதுகரையில் இருந்து கார்த்திக் (27), அஜீத் (25) மற்றும் மற்றொரு நண்பர் ஆகிய 3 பேரும் சர்வேஸ்வரன் என்பவரது ஆட்டோவில் ஏர்வாடி சடைமுனியன்வலசைக்கு சென்று கோவில் அருகில் ஆட்டோவை நிறுத்தி உள்ளனர்.
கத்திக்குத்து
பின்னர் 3 பேரும் பக்கத்து தெருவில் உள்ள பெண் வீட்டு காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து பெண்ணின் தாயாரிடம் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கார்த்திக் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அதனை பெண்ணின் தாயார் மறுத்து 3 பேரையும் வெளியே தள்ளி கதவை பூட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் தாயை சரமாரியாக குத்தி உள்ளார். இதை தடுக்க வந்த காதலியையும் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து 2 பேரும் அலறி துடித்தனர்.
ஒப்படைப்பு
அவர்களது அலறும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது வீடு முழுதும் ரத்தமாக கிடந்தது. ஊர் பொதுமக்கள் கோவில் அருகில் நின்று கொண்டு இருந்த ஆட்டோவையும் ஆட்டோ டிரைவரையும் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் 2 பேரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்்் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணை
இது குறித்து ஏர்வாடி போலீசார் ஆட்டோ டிரைவர் சர்வேஸ்வரனை பிடித்து விசாரித்தபோது ஆட்டோவில் வாடகைக்கு வந்ததாகவும் கார்த்திக் தனது நண்பர் மேலும் விவரங்கள் தெரியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஏர்வாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.