பல்லடம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கார்கள் மோதல்
கோவை காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூர்த்தி (வயது 51), டேவிட் ராஜ் (33), சுரேஷ் (36), வெள்ளிமலை (33). இவர்கள் 4 பேரும் ஒரு காரில் கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை வெள்ளிமலை ஓட்டி வந்தார். கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே பெரும்பாளி என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிரே பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதியது. இதில் வெள்ளிமலை மற்றும் அவருடன் வந்த 4 பேரும், எதிரே வந்த காரில் பயணம் செய்த உடுமலையை சேர்ந்த திராவிடமணி (69), அவரது மனைவி மீனாட்சி (56), மகள் கிருத்திகா (29) ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
ஒருவர் பலி-6 பேர் காயம்
விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிேசாதனை செய்ததில் மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். பலத்த காயமடைந்த மற்றவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையிலும், கோவை தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-------