கார் கண்ணாடியை உடைத்து நகை-பணம் இருந்த பை திருட்டு

கார் கண்ணாடியை உடைத்து நகை-பணம் இருந்த பை திருட்டுபோனது.

Update: 2023-04-25 21:32 GMT

கைப்பை திருட்டு

பெங்களூரு ஜலதர்சினி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 50). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குணசீலம் வெங்கடாஜலபதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் வந்தார். குணசீலத்தில் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் அருகில் இருந்த காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காரில் இருந்த கைப்பையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி, தனிப்பிரிவு போலீஸ்காரர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கைப்பையில் 4 விலை உயர்ந்த செல்போன்கள், நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் திருட்டுபோன செல்போனில் டிராக்கிங் டிவைஸ் செல்போன் செயலி உள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது.

மீட்பு

உடனடியாக அந்த செயலியை பயன்படுத்திய போலீசார் திருட்டுபோன செல்போன் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதை கண்டுபிடித்தனர். அப்பகுதியில் போலீசார் சென்று பார்த்தபோது, காரில் இருந்து திருடப்பட்ட கைப்பை வாத்தலை காத்தான்கோவில் சுற்றுச்சுவர் அருகே கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை கைப்பற்றிய போலீசார் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அதில் செல்போன், நகை மற்றும் பணம் ஆகியவை இருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்த சுரேஷ்குமாரின் குடும்பத்தினர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர்.

சப்-இன்ஸ்பெக்டர் மாயம்

*மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுபட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல்(59). இவர் மணப்பாறை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ விடுப்பில் உள்ள அவரை நேற்று முதல் காணவில்லை. இது தொடர்பாக அவரது மகன் பால நாகராஜ் மணப்பாறை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*முசிறி அருகே பூசாரிபட்டியை சேர்ந்த சீனிவாசனின் மகள் உஷாராணி(25). இவருக்கும் கீழ நங்கவரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியனுக்கும்(35) திருமணமாகி, பின்னர் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கிற்காக முசிறி கோர்ட்டுக்கு வந்த பாலசுப்பிரமணியன், தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும், தன்னை அவமானப்படுத்தியதாக உஷாராணி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார். கோர்ட்டு வளாகத்தின் வெளியில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

குண்டர் சட்டம் பாய்ந்தது

*திருச்சி மாநகரில் பணம் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முதலியார் சத்திரத்தை சேர்ந்த ஆரோக்கியசெல்வகுமார் (20), காஜாபேட்டை பசுமரத்தை சேர்ந்த ஆரிப்கான் (19) ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்