கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
வாசுதேவநல்லூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பு கணபதி மகன் சந்தோஷ் (வயது 20). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த காசிப்பாண்டி மகன் கருப்பசாமி என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வாசுதேவநல்லூரில் இருந்து நாரணாபுரம் சென்றனர். வாசுதேவநல்லூர் அருகே சிந்தாமணிபேரி புதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார், திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. சந்தோஷ், கருப்பசாமி ஆகிய தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அப்போது அவ்வழியாக காரில் சென்ற டாக்டர் சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. படுகாயம் அடைந்த 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கும், அதன் பின்னர் அங்கிருந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். கருப்பசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் கூடலூர் தெற்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.