கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி
மானூர் அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் என்ஜினீயர் இறந்தார்.;
மானூர்:
மானூர் அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் என்ஜினீயர் இறந்தார்.
என்ஜினீயர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 41). தனியார் காற்றாலையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் தனது தாயாரை பார்த்து விட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
நெல்லை - சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் மானூர் அருகே உள்ள நரியூத்து பகுதியில் சென்றபோது, எதிரே சங்கரன்கோவிலைச் சேர்ந்த அயூப்கான் மகன் ஆஷிக் மஸ்தான் (25) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
பரிதாப சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சதீஷ்குமாருக்கு மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.