கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் படுகாயம்
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் படுகாயம்;
திருப்புவனம்
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள புதுராமநாதபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி(வயது 43). இவர் மதுரையில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் காரில் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரைக்கு சென்றார். பூவந்தி பகுதியில் சென்றபோது அந்த வழியாக மதுரை மாவட்டம் மேலச்சக்குடியை சேர்ந்த வினோத்குமார்(23) என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். மந்தக்கருப்பு கோவில் அருகே கார் வரும்போது மாடு குறுக்கே வந்துள்ளது. அதுசமயம் பாலதண்டாயுதபாணி காரை திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் காரின் பின்பக்கம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வினோத்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காரின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து பாலதண்டாயுதபாணி பூவந்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். காயம் அடைந்த வினோத்குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.