சூளகிரி அருகே கோபசந்திரம் வெங்கடேஸ்வர சாமி கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2023-04-03 18:45 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே கோபசந்திரம் வெங்கடேஸ்வர சாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது.

தேரோட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றங்கரை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிண திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது.

ஆண்டுதோறும் இக்கோவில் தேர்த்திருவிழா, வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது.

விழாவையொட்டி, உற்சவ மூர்த்தி, மலையில் கீழே கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தேரோட்டம் நடைபெற்ற தேர்வீதிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி வைக்கப்பட்டார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானபக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன், வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

அன்னதானம்

விழாவில், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பல்வேறு இடங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரில் வந்த சாமியை வழிபட்டனர். விழாவையொட்டி, கோபசந்திரம் கிராமத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பானகம், நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்