சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த கார் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை

14 வயது சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்த கார் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-03-09 17:43 GMT

14 வயது சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்த கார் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

கார் டிரைவர்

காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் திருப்பூக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 24), கார் டிரைவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து ஜெயசூர்யாவை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்கு தொடர்பான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜெயசூர்யாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜெயசூர்யாவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்