அதிராம்பட்டினத்தில் விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை

அதிராம்பட்டினத்தில் விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசில் அவருடைய மனைவி புகார் அளித்துள்ளார்.

Update: 2023-05-31 18:40 GMT

அதிராம்பட்டினத்தில் விஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசில் அவருடைய மனைவி புகார் அளித்துள்ளார்.

கார் டிரைவர்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழப்பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது42). இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு சந்தோஷ், சதீஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். லட்சுமணன், ஒருவரிடம் பல ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

தற்போது அதிராம்பட்டினம் நகராட்சியில் தற்காலிக டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமணன் திடீரென பூச்சி மருந்து (விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் மனைவி அமுதா புகார் அளித்தார்.

மிரட்டல்?

அதில் தனது கணவர் மீது திருட்டு புகார் கொடுக்கப்போவதாக சிலர் சேர்ந்து மிரட்டியதால் அவர் மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அமுதா கூறி உள்ளார். இதனிடையே லட்சுமணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு புகார் கொடுக்கப்போவதாக சிலர் மிரட்டல் விடுத்ததால் லட்சுமணன் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி லட்சுமணனின் உறவினர்கள் நேற்று மாலை அதிராம்பட்டினம் போலீஸ் நிலையம் அருகே பட்டுக்கோட்டை மெயின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்