கார் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம்; போலீஸ் ஏட்டு ரிஸ்வான் சஸ்பெண்ட்

வாகன சோதனையின் போது கார் ஓட்டுனர் ராஜ்குமாருக்கும் போலீஸ் ஏட்டு ரிஸ்வானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீஸ் ஏட்டு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

Update: 2024-03-24 06:07 GMT

சென்னை,

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40). கார் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் அடுத்த வானகரம் சர்வீஸ் சாலையில் தனது காரில் ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் மதுரவாயல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். காருக்குள் ஒரு பெண்ணுடன் அமர்ந்து ராஜ்குமார் பேசிக்கொண்டு இருப்பதை கண்ட ஏட்டு ரிஸ்வான், போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி சென்று அவரிடம் விசாரித்தார்.அப்போது ராஜ்குமார், காருக்குள் அமர்ந்தபடியே பதில் கூறினார். இதனால் ஏட்டு ரிஸ்வான், அவரை காரில் இருந்து கீழே இறங்கும்படி கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் காரில் இருந்து கீழே இறங்கிய டிரைவர் ராஜ்குமாரை, போலீஸ் ஏட்டு ரிஸ்வான் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர், மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த மதுரவாயல் போலீசார், ராஜ்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜ்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் ஏட்டு தாக்கியதால்தான் ராஜ்குமார் இறந்துவிட்டதாக அவரது சகோதரர், மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் முதலில் இதனை மறுத்த போலீஸ் ஏட்டு ரிஸ்வான், தான் ராஜ்குமாரை தாக்கவில்லை எனவும், வலிப்பு ஏற்பட்டு மயங்கி கிடந்தவரை தான் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.

இதுபற்றி டிரைவர் ராஜ்குமாருடன் பேசிக்கொண்டு இருந்த பெண்ணிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், டிரைவர் ராஜ்குமாரை போலீஸ் ஏட்டு ரிஸ்வான் தாக்கியதை உறுதி செய்தார். இதற்கிடையில் ராஜ்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவர் தாக்கப்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் ஏட்டு ரிஸ்வானை கைது செய்து விசாரித்தனர். இந்த நிலையில், போலீஸ் ஏட்டு ரிஸ்வானை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்