அரசு பஸ் மீது கார் மோதல்; ஆந்திர வாலிபர் பலி
புதுக்கோட்டை அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் ஆந்திராவை சேர்ந்த வாலிபர் பலியானார். சிறுமிகள் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.
பஸ்-கார் மோதல்
புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து கீரனூருக்கு இன்று அதிகாலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை கொப்பம்பட்டி ஆவிக்கரை பகுதியை சேர்ந்த மணிவாசன் (வயது 46) என்பவர் ஓட்டினார். அந்த பஸ்சில் கண்டக்டராக பேரையூர் தெற்கு தாளப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (55) என்பவர் இருந்துள்ளார். பஸ்சில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சாந்தி (50) பயணித்துள்ளார்.
இந்த அரசு பஸ் புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் அருகே உள்ள ரெங்கம்மாள் சத்திரம் என்னும் இடத்தில் சென்ற போது எதிரே திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சின் ஒரு பக்கம் முழுவதும் சேதமடைந்தது.
வாலிபர் பலி- 12 பேர் படுகாயம்
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் கீழப்பட்டு பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் அய்யர் (29) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் பயணம் செய்த அதே பகுதியை சேர்ந்த விஜயலெட்சுமி (31), உஷாராணி (55), முனியபெருமாள் (62), சேர்மாதேவி (27), முருகராஜ் (38), வீரசேகர் (36), ஹரிபிரியா (8), விஷாலினி (8), லோகஜனனி (1) ஆகிய 9 பேர் மற்றும் பஸ் டிரைவர், கண்டக்டர், சாந்தி ஆகிய 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் மற்றும் சிப்காட் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் படுகாயமடைந்த சிறுமிகள் உள்பட 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசார் விபத்தில் உயிரிழந்த ஹரிசங்கர்அய்யர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.