பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்

Update: 2022-12-24 18:45 GMT

காரிமங்கலம்:

பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை மற்றும் கேரள மாநில பகுதிகளுக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக காரிமங்கலம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் காரிமங்கலம் கும்பாரஅள்ளி சோதனைச்சாவடி, அகரம் பிரிவு சாலை, மொரப்பூர் சாலை, பெரியாம்பட்டி பிரிவு சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காரிமங்கலம் அகரம் பிரிவு சாலை வழியாக சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அதனை சந்தேகத்தின்பேரில் போலீசார் காரை நிறுத்த முயன்றபோது, டிரைவர் சிறிது தூரம் சென்று காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

வலைவீச்சு

இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தபோது, மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் காரில் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு குட்கா கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவர் மற்றும் இதில் தொடர்பு உடையவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்