செம்மரம் கடத்தியவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - பா.ஜ.க. நிர்வாகியின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு

குற்றப் பின்னணி உள்ளவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.;

Update:2024-04-01 19:56 IST

கோப்புப்படம் 

சென்னை,

தமிழக பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளரும் தொழிலதிபராகவும் இருப்பவர் வெங்கடேஷ். இவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, செங்குன்றம் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், வெங்கடேசுக்கு எதிராக ஆவடி, செங்குன்றம் காவல் நிலையங்களில் 10 வழக்குகளும், ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்களில் செம்மர கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்ற செயல்கள் தொடர்பாக 49 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. வெங்கடேஷ் சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவராக இருந்தால் போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிடுவதற்கு கோர்ட்டுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் பல வழக்குகளில் தொடர்புடைய, குற்றப் பின்னணி உள்ளவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். மேலும், நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்