சந்தை விலையைவிட வழிகாட்டுதல் விலை அதிகம் உள்ளதாக கூறி நிலத்துக்கு கூடுதல் முத்திரைத்தாள் கட்டணம் கேட்க முடியாது - ஐகோர்ட்டு

சந்தை விலையைவிட நிலத்துக்குரிய வழிகாட்டுதல் விலை அதிகமாக உள்ளது என்று கூறி கூடுதல் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும் என பத்திரப்பதிவுத்துறை கூற முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-11 00:19 GMT

மத்திய அரசு நிலம்

எண்ணூரை அடுத்துள்ள அத்திப்பட்டு, வல்லூர் கிராமங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலத்தை வாங்கி எண்ணெய் கிடங்கு அமைக்க இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசின் உப்பு கழகத்துக்கு சொந்தமான 108.07 ஏக்கர் நிலத்தை, ஒரு ஏக்கர் ரூ.18 லட்சம் என்று விலை பேசி 2009-ம் ஆண்டு ரூ.19 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்துக்கு காசோலை கொடுத்துள்ளது. அதே ஆண்டு மே மாதம் முதல் அந்த நிலத்தை இந்துஸ்தான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலத்துக்கான பத்திரப்பதிவு கடந்த 2014-ம் ஆண்டு நடந்தது.

பதிவுக்கட்டணம்

அப்போது கூடுதலாக முத்திரை கட்டணத்தையும், பதிவுக்கட்டணத்தையும் நிர்ணயம் செய்து, ரூ.17 கோடியே 29 லட்சத்து 12 ஆயிரத்தை செலுத்தினால் மட்டுமே பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை வழங்க முடியும் என்று திருவொற்றியூர் சார்பதிவாளர் மற்றும் மாவட்ட முத்திரைத்தாள் அதிகாரி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் இந்துஸ்தான் நிறுவனம் தொடர்ந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வக்கீல், மத்திய அரசின் நிலத்துக்குரிய சந்தை விலை பத்திரப்பதிவில் குறிப்பிடப்படவில்லை. நிலத்துக்கு மனுதாரர் கூறும் விலையைவிட வழிகாட்டுதல் விலை மிகவும் அதிகமாக உள்ளது என்று வாதிட்டார்.

கூடுதல் தொகை

அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஏக்கர் ரூ.18 லட்சம் என்று விலை பேசி நிலம் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சதுர அடி நிலத்துக்கு ரூ.500 கூடுதலாக நிர்ணயித்து தமிழ்நாடு அரசு இந்த தொகையை கேட்கிறது. மத்திய அரசு நிலத்தை குறைவான விலைக்கு மனுதாரர் வாங்கியுள்ளார் என்று இந்த வழக்கு தொடரப்படவில்லை. மொத்த நிலத்துக்கும் ரூ.19 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரம் கொடுத்தது போக, கூடுதலான தொகையை மனுதாரர் நிறுவனம் கொடுத்துள்ளது. அதை பத்திரப்பதிவில் குறிப்பிடவில்லை.

இதேபோன்ற பிரச்சினை பாரத் பெட்ரோலிய கார்ப்பரேசன் நிறுவனம் மத்திய அரசு நிலத்தை வாங்கியபோதும் நடந்துள்ளது.

விலை குறைப்பு

அப்போது, இதுபோல கூடுதல் தொகை கேட்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை இந்த ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. நிலத்துக்குரிய தொகையை மத்திய அரசுக்கு கொடுத்துவிட்டால், அதன் பின்னர் நிலத்துக்குரிய சந்தை விலை மறைப்பு, பத்திரப்பதிவு கூடுதல் கட்டணம் என்ற கேள்விக்கு இடமில்லை. அதாவது சந்தை விலையைவிட நிலத்துக்குரிய வழிகாட்டுதல் விலை அதிகமாக உள்ளது என்று கூறி கூடுதல் முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூற முடியாது.

வழிகாட்டுதல் விலை என்பது ஒரு நிலத்தின் மதிப்பை பதிவாளருக்கு தெரியப்படுத்துவதற்குத்தான். முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்கவே நிலத்தின் விலையை குறைத்து காட்டியிருப்பதாக கூற முடியாது.

சுற்றறிக்கை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வழக்கிலும் இதுபோல கூடுதல் கட்டணம் கேட்க முடியாது என்று இந்த ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அதில், இந்த உத்தரவை தீவிரமாக பின்பற்ற வேண்டும். இதுபோல கூடுதல் கட்டணத்தை கேட்டு பத்திரங்களை வழங்க மறுக்கக்கூடாது என்று அனைத்து பதிவாளர்களுக்கும் 10 நாட்களுக்குள் சுற்றறிக்கையை பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. அனுப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியும் இதுவரை சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை.

அதனால்தான் மத்திய அரசு நில விற்பனையில் எந்திரத்தனமாக மதிப்பீடு செய்யப்பட்டு கூடுதல் தொகை கோரப்பட்டுள்ளது. எனவே பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி., ஐகோர்ட்டு உத்தரவின்படி சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். இந்த வழக்கை ஏற்றுக்கொள்கிறேன். கூடுதல் தொகை கேட்ட அரசு உத்தரவை ரத்து செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்