துறையூர் காய்கறி மார்க்கெட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி வியாபாரம்
துறையூர் காய்கறி மார்க்கெட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி வியாபாரிகள் வியாபாரம் செய்தனர்.;
துறையூர்:
துறையூரில் நகராட்சிக்கு சொந்தமான சாமிநாதன் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக நகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட்டின் தரைக்கடை பகுதியில் உள்ள மின் இணைப்புக்குரிய மின் கட்டணத்தை முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து துறையூர் மின்வாரிய அலுவலர்கள் தரைக்கடை பகுதியில் உள்ள மின் இணைப்பை துண்டித்து விட்டனர். இது பற்றி தரைக்கடை வியாபாரிகள், துறையூர் நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களுக்கு மின்சாரக் கட்டணத்தை கட்டும்படி தகவல் தெரிவித்தனர். ஆனால் கடந்த 4 நாட்களுக்கு மேலாகியும் நகராட்சி நிர்வாகம் மின்கட்டணத்தை செலுத்தவில்லை. இதனால் தரைக்கடை வியாபாரிகள் மாலை 6 மணி முதல் மெழுகுவர்த்தி மற்றும் லாந்தர் விளக்குகள் ஆகியவற்றின் வெளிச்சத்தில் வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தரைக் கடைக்குரிய தினசரி வாடகைக் கட்டணத்தையும் நாங்கள் நகராட்சிக்கு செலுத்தி வருகிறோம். இது போன்று சம்பவம் ஏற்கனவே 3 முறை நடந்துள்ளது. மேலும் கழிவறை வசதி கூட இல்லை. மழைக் காலங்களில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மேற்கூரைப் பகுதியில் இருந்து மழை நீர் உட்புகுந்து விடுவதால், வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுவதோடு, காய்கறிகளும் மழை நீரில் நனைந்து வீணாவதாக தரைக்கடை வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் சொத்து வரி, தண்ணீர் வரி உள்பட பல்வேறு வரிகளை வசூலிக்கும் துறையூர் நகராட்சி, அங்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாததும், காய்கறி மார்க்கெட்டில் மின் கட்டணம் முறையாக செலுத்தாததும் வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.